உடல் தொடர்பான நேர்மறை அணுகுமுறை மற்றும் உங்கள் உடல் அளவை ஏற்றுக்கொள்ளல் | The Family Planning Association of Sri Lanka

உடல் தொடர்பான நேர்மறை அணுகுமுறை மற்றும் உங்கள் உடல் அளவை ஏற்றுக்கொள்ளல்

சமூக ஊடகங்கள், திருத்தப்பட்ட படங்கள் மற்றும் ஒரே மாதிரியான அழகுத் தரநிலைகள் நிறைந்த இந்த காலத்தில், ஒருவருடைய “சிறந்த” உடல் அமைப்பு மற்றும் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்ற போலி பிம்பங்களால் ஈர்க்கப்படுவது மிகவும் எளிதாகிவிட்டது. வயது மற்றும் பாலின வேறுபாடின்றி பெரும்பாலான மக்கள், தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட இந்த அழகுத் தரங்களுடன் தங்களையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு, விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தன்னைப் பற்றியோ அல்லது மற்றவர்களைப் பற்றியோ உடலளவில் தொடர்ந்து விமர்சனம் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவான அழகுத் தரங்களிலிருந்து மாறுபட்ட உடல் அமைப்பு கொண்டவர்கள் பெரும்பாலும் தேவையற்ற அறிவுரைகளுக்கும் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள். இது ஒருவரது உளநலம், தன்னம்பிக்கை, உறவுகள் மற்றும் வேலை வாய்ப்புகளைப் பாதிக்கலாம்; மேலும் இது ஒருவருக்குத் தனக்குள்ளேயே அவமான உணர்ச்சி, மனச்சோர்வு, உணவு தொடர்பான கோளாறுகள் (eating disorders) மற்றும் சில செயல்பாடுகளைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம்.

வெளிப்புற மற்றும் உட்புற அழுத்தங்களுக்கு மத்தியில், ஒருவரது இயல்பான உடலை ஏற்றுக்கொண்டு "உடல் நேர்மறை எண்ணம்" (Body Positivity) எனும் அணுகுமுறையை கடைப்பிடிப்பதும் மிகவும் சவாலானதாக இருக்கலாம்.

"உடல் நேர்மறை இயக்கம்" முதலில் அதிக பருமனான உடல் கொண்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று அது இனம், பாலினம் மற்றும் மாற்றுத்திறன் போன்ற காரணங்களால் பொதுவான அழகுத் தரங்களிலிருந்து மாறுபட்டதாக உணரும் அனைவருக்கும் ஆதரவளிக்கிறது. இந்த இயக்கம் சமூகக் கட்டுப்பாடுகளைச் சவாலுக்கு உட்படுத்துவதோடு, உருவம், எடை அல்லது தோற்றம் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொருவரும் தங்கள் உடலின் மீது நம்பிக்கை கொள்ளவும், தங்கள் மதிப்பினை மீட்டெடுக்கவும் ஊக்குவிக்கிறது.

உங்கள் உடல் அளவை ஏற்றுக்கொள்வது என்பது ஆரோக்கியத்தை புறக்கணிப்பது அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியம் என்பது தோற்றத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனநலம், உடல் இயக்கத் திறன், ஊட்டச்சத்து, தூக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தங்கள் உடலில் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் உணரும் போது, மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் உடல் ஏற்றுக்கொள்ளலை (Body Acceptance) மேம்படுத்துவதற்கான வழிகள்:

  1. உங்கள் சூழலைத் தேர்ந்தெடுங்கள்: உங்கள் உடலைப் பொருட்படுத்தாமல், நீங்கள் யார் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுடன் இருங்கள்.

  2. சமூக ஊடகங்களை சீரமையுங்கள்: உடல் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடரவும் உங்களை குறைவாக உணரச் செய்யும் கணக்குகளிலிருந்து விலகுங்கள்.

  3. எதிர்மறை எண்ணங்களை சவால் செய்யுங்கள்: உங்கள் உடலைப் பற்றி எதிர்மறையாக நினைக்கும்போது அல்லது பேசும்போது, இதை ஒரு நண்பரிடம் சொல்வீர்களா என்று உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

  4. உடல்களைப் பற்றி கருணையுடன் பேசுங்கள்: மொழியானது மிகவும் வலிமையானது, சொற்கள் காயப்படுத்தக்கூடியவை. மற்றவர்களின் உடல் அமைப்பு மற்றும் எடையைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.

  5. உங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணியுங்கள்: நீங்கள் வசதியாகவும் தன்னம்பிக்கையுடனும் உணரும் ஆடைகளை அணியுங்கள்.

  6. உணவு சார்ந்த உள்ளுணர்வைக் கவனியுங்கள் (Eat Intuitively): உங்கள் உடலின் தேவையைக் கவனித்து பசிக்கும்போது உண்ணுங்கள், பசி நிறைந்ததும் நிறுத்திவிடுங்கள்.

  7. கடுமையான உணவுக் கட்டுப்பாட்டு பழக்கங்களைத் (Diet Culture) தவிர்க்கவும்: நடைமுறைக்குச் சாத்தியமில்லாத மற்றும் நிலையற்ற உணவு முறைகள் நன்மையை விடத் தீமையையே அதிகம் செய்யும்.

  8. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சியைச் செய்யுங்கள்: அது நடனம், நடைப்பயிற்சி அல்லது நீச்சல் என எதுவாகவும் இருக்கலாம்.

  9. உடல் சார்ந்த நேர்மறை எண்ணம் எங்கும் இருக்க வேண்டும்: பாடசாலைகள் முதல் பணியிடங்கள் மற்றும் சுகாதார நிலையங்கள் வரை, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளும் வசதிகளும் மரியாதை மற்றும் அங்கீகாரம் அளிக்கும் சூழலை உருவாக்கும்.

  10. யாரிடமாவது பேசுங்கள்: சுற்றியுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் உங்கள் உடலை முழுமையாக ஏற்பது சில நேரங்களில் சவாலாகவும் கடினமாகவும் இருக்கலாம். ஒரு மனநல நிபுணரிடம் பேசுவது உங்கள் நலனைக் மேம்படுத்த உதவலாம்.

இறுதியாக, உடல் நேர்மறை என்பது ஒருவரது உருவம் மற்றும் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மனிதனும் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் என்பதை அங்கீகரிப்பதே ஆகும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கல் யாரேனும் தங்கள் உடலை ஏற்றுக்கொள்ளுதலில் சிரமப்படுகிறார்கள் எனில், இலங்கை குடும்பத்திட்ட சங்க சுகாதார நிலையத்தின்(FPASL) ஆலோகயா ஆலோசனை மையத்தை (Alokaya Counselling Centre) பின்வரும் முறைகளில் தொடர்புகொள்ளுங்கள். (+94 9895252 , இல. 37/27, புல்லர்ஸ் வீதி, கொழும்பு 07)

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By