அதிகப்படியான மாதவிடாய் என்றால் என்ன?
அதிகப்படியான மாதவிடாய், மிகையான மாதவிடாய் இரத்தப்போக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் வழக்கமான மாதவிடாய் இரத்தப்போக்கை விட அதிகமாகவோ அல்லது நீண்டதாகவோ இருப்பதைக் குறிக்கிறது. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
7 நாட்களுக்கு மேலான இரத்தப்போக்கு
அடிக்கடி சுகாதார அணியாடைகள் அல்லது டெம்புன்களை மாற்ற வேண்டிய அவசியம்
பெரிய அளவிலான இரத்த கட்டிகள் வெளியேறுதல்
மிகவும் சோர்வாக, பலவீனமாக அல்லது மயக்கம் போல் உணர்தல்
கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு பொதுவானது. மற்றும் பெரும்பாலும் சிகிச்சையளிக்கக்கூடியது.
அதிகப்படியான மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது?
அதிகப்படியான மாதவிடாய் பல காரணங்களுக்காக ஏற்படலாம், அவற்றுள்:
ஹோர்மோன் சமநிலையின்மை
கருப்பையில் நீர்க்கட்டிகள் அல்லது பாதிப்புக்கள்
இரத்தப்போக்கு கோளாறுகள்
அரிதாக, எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிலைமைகள்
சரியான காரணத்தைக் கண்டறிந்து தீர்வுகளை பரிந்துரைக்க ஒரு சுகாதார வழங்குநரால் உதவ முடியும்.
அதிகப்படியான மாதவிடாய் சாதாரணமானதா?
மாதவிடாய் சக்கரத்தில் சில மாறுபாடுகள் இயல்பானவை என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தலையிடும் மாதவிடாய்களை நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல. இரத்தப்போக்கு மிகவும் அதிகமாகவோ, நீண்டதாகவோ அல்லது வலிமிகுந்ததாகவோ இருந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
அதிகப்படியான மாதவிடாய் உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்?
அதிக இரத்தப்போக்கு பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கும்:
சோர்வு அல்லது பலவீனம்
இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை
பாடசாலை, வேலை அல்லது அன்றாட நடவடிக்கைகளைத் தவறவிடுதல்
மன அழுத்தம்
கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கை சரியாக நிர்வகிப்பது, உடல் மற்றும் உளநலம் இரண்டையும் மேம்படுத்த உதவும்.
அதிகப்படியான மாதவிடாய் எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
சிகிச்சை அதன் காரணத்தைப் பொறுத்தது. அதில் பின்வருவன அடங்கலாம்:
இரத்தப்போக்கை குறைக்க அல்லது ஹோர்மோன்களை கட்டுப்படுத்தும் மருந்துகள்
இரத்தச்சோகை ஏற்பட்டால் இரும்புச் சத்து மாத்திரைகள்
நீர்க்கட்டிகளை அகற்றும் மருத்துவச் செயல்முறைகள்
அறிகுறிகளை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுய பராமரிப்பு முறைகள்
ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்வது, சிக்கல்களைத் தவிர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
உங்கள் மாதவிடாய் பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தினால், மருத்துவ உதவியை நாடுங்கள்:
மாதவிடாய் இரத்தப்போக்கு 7 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தால்
ஒவ்வொரு 1–2 மணி நேரத்திற்கும் ஒருமுறை சுகாதார அணியாடை அல்லது டெம்புன் மாற்ற வேண்டியிருந்தால்
மிகுந்த சோர்வு அல்லது மயக்கம் ஏற்பட்டால்
பாடசாலை, வேலை அல்லது சமூக வாழ்க்கையை பாதித்தால்
நினைவில் கொள்ளுங்கள்: கடுமையான மாதவிடாய் “எளிதில் சமாளிக்க வேண்டிய ஒன்று” அல்ல.