Q: பிரசவத்திற்குப் பின்னரான குடும்பக் திட்டமிடல் ஏன் முக்கியம்?
பிரசவத்திற்குப் பிறகு உங்கள் உடலுக்கு மீண்டுவர நேரம் தேவை. குடும்பக் திட்டமிடல் , அடுத்த குழந்தையை எப்போது பாதுகாப்பாகப் பெறுவது என்பதைத் திட்டமிட உதவுவதுடன், உங்கள் உடல்நலத்தையும் குழந்தையின் நலனையும் பாதுகாக்கிறது.
Q: குழந்தை பிறந்த பிறகு எப்போது கருத்தடை முறையைப் பயன்படுத்தத் தொடங்கலாம்?
இது நீங்கள் தேர்வு செய்யும் முறையையும் உங்கள் உடல்நிலையையும் பொறுத்தது. சில கருத்தடை முறைகளைப் பிரசவத்திற்குப் பிறகு உடனடியாகத் தொடங்கலாம்; சில முறைகளை சில வாரங்கள் கழித்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படலாம். உங்கள் நிலைக்கு ஏற்ற ஆலோசனையை ஒரு சுகாதார நிபுணர் வழங்குவார்.
Q: பிரசவத்திற்குப் பின்னர் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருத்தடை முறைகள் யாவை?
பின்வரும் முறைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற கருத்தடை முறைகளில் அடங்கும்:
புரோஜெஸ்டின் மட்டும் கொண்ட மாத்திரைகள் (Progestin-only pills)
கருத்தடை ஊசிகள் (Injectable contraceptives)
கருத்தடை உள்வைப்புகள்(Implants)
கருப்பையக சாதனங்கள்(IUDs)
ஆணுறை (Condoms)
Q: தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கருத்தடை முறைகளைப் பயன்படுத்தலாமா?
ஆம். பல கருத்தடை முறைகள் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பாதுகாப்பானவை. செம்பு கருப்பை சாதனம் (Copper IUD) மற்றும் ஆணுறை போன்ற ஹோர்மோன் இல்லாத முறைகள் பொதுவாக பரிந்துரைக்கப்படுகின்றன.
Q: தாய்ப்பால் கொடுப்பது மட்டும் கர்ப்பத்தைத் தடுக்குமா?
ஆம். இது பாலூட்டும் அமினோரியா முறை (Lactational Amenorrhea Method – LAM) என்று அழைக்கப்படுகிறது. இது 98% க்கும் மேல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பின்வரும் மூன்று நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்:
உங்கள் குழந்தைக்கு 6 மாதங்களுக்குக் குறைவான வயது இருக்க வேண்டும்.
நீங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் (வேறு எந்த உணவோ தண்ணீரோ கொடுக்கக் கூடாது).
உங்கள் மாதவிடாய் இன்னும் தொடங்கியிருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக வேறு ஒரு கருத்தடை முறையைத் தொடங்க வேண்டும்.
Q: பிரசவத்திற்குப் பிறகு எனக்கான சிறந்த கருத்தடை முறையை எவ்வாறு தேர்வு செய்வது?
உங்கள் உடல்நிலை, தாய்ப்பால் கொடுக்கும் நிலை, எதிர்காலத்தில் குழந்தை பெறும் திட்டம் மற்றும் உங்கள் தனிப்பட்ட விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்தே சிறந்த முறை தீர்மானிக்க/ தேர்ந்தெடுக்கப்படும். பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் சரியான முறையை தேர்வு செய்ய உதவுவார்.
Bloom by FPA Sri Lanka உதவி மையத்திற்கு அழைக்கவும்: 077 955 2979
உங்களுக்கு அருகிலுள்ள FPA மருத்துவ நிலையத்தைக் கண்டறியவும்: https://bit.ly/47IvSRp
Q: மீண்டும் கர்ப்பம் தரிப்பதற்கு முன் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
தாயும் குழந்தையும் சிறந்த உடல்நலத்தைப் பெறுவதற்காக, உங்கள் அடுத்த கர்ப்பத்திற்காக பொதுவாக குறைந்தது 18 முதல் 24 மாதங்கள் வரை காத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த “பிரசவ இடைவெளி” (Birth Spacing) உங்கள் உடல் முழுமையாக மீண்டு வர உதவுவதுடன், கர்ப்பகால மற்றும் பிரசவ சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது.