பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் கருத்தரிப்பதற்கான ஒரு முழுமையான வழிகாட்டி | The Family Planning Association of Sri Lanka

பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் கருத்தரிப்பதற்கான ஒரு முழுமையான வழிகாட்டி

கர்ப்பம் தரிக்க முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்வது மிகவும் தனிப்பட்ட ஒரு தீர்மானமாகும். சிலருக்கு இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கும்; மற்றவர்களுக்கு இது பல கேள்விகளுடன் தொடங்கலாம். கர்ப்பம் எவ்வாறு ஏற்படுகிறது, எந்த காலகட்டத்தில் உடல் கர்ப்பம் தரிக்க அதிகம் தயாராக இருக்கும், மேலும் உடல்நலம், வயது மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இதில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது, தகவலறிந்த மற்றும் நம்பிக்கையுடனான முடிவுகளை எடுக்க உதவும்.

கர்ப்பம் தரிப்பது பற்றிய பொதுவான கேள்விகளுக்கு இந்த வழிகாட்டி பதிலளிக்கிறது.

கர்ப்பம் தரிப்பது எப்படி – நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை 
 

  1. கர்ப்பம் எவ்வாறு ஏற்படுகிறது? 

    ஒரு விந்தணு ஒரு கருமுட்டையை கருவுறச் செய்து, கருவுற்ற கருமுட்டை கருப்பையில் பதியும் போது கர்ப்பம் ஏற்படுகிறது. இது பொதுவாக யோனிவழி உடலுறவு மூலம் நிகழ்கிறது, ஆனால் IVF(In Vitro Fertilisation) போன்ற துணை இனப்பெருக்க முறைகள் மூலமாகவும் கர்ப்பம் ஏற்படலாம்.

    இயற்கையாக கர்ப்பம் தரிப்பதற்கு:

  • கருப்பை கொண்ட நபருக்கு கருமுட்டை சூலகத்திலிருந்து வெளியேறும் செயற்பாடு(Ovulation) நிகழ வேண்டும் .

  • இனப்பெருக்க பாதையில் விந்தணுக்கள் இருக்க வேண்டும்.

  • கருவுறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் காலப்பகுதியில் (Fertile Window) கருத்தரித்தல் நடைபெற வேண்டும்.  
     

  1. கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது? 

    கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் காலம் கருவுறும் காலப்பகுதி (Fertile Window) ஆகும். இதில் அடங்குவது:

  • கருமுட்டை வெளியேற்றம் (Ovulation) நடைபெறும் நாள்

  • கருமுட்டை வெளியேற்றத்திற்கு முன்னரான 4–5 நாட்கள்

    பொதுவாக, அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு சுமார் 14 நாட்களுக்கு முன்பு கருமுட்டை வெளியேற்றம் நடைபெறும். இருப்பினும், இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். மாதவிடாய் சுழற்சியைப் பதிவு செய்வது அல்லது Ovulation Predictor Kit-களைப் பயன்படுத்துவது கருவுறும் நாட்களை அடையாளம் காண உதவும். 
     

  1. கர்ப்பம் தரிக்க “சிறந்த வயது” என்று ஏதேனும் உள்ளதா? 

    உயிரியல் ரீதியாக, கர்ப்பம் தரிக்கும் திறன் பொதுவாக அதிகமாக இருக்கும் வயது:

  • 20 ன் இறுதிப்பகுதி முதல் 29-களின் இறுதிப்பகுதி வரை

  • இத்திறன் 30 வயதிற்குப் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும், குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு இது குறைவாக காணப்படும்.

    இருப்பினும், வயது மட்டுமே கர்ப்பத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருப்பதில்லை. 30 மற்றும் 40 வயதுகளில் பலர் சரியான மருத்துவ பராமரிப்புடன் ஆரோக்கியமான கர்ப்பத்தை அனுபவிக்கிறார்கள். உணர்ச்சி ரீதியான தயார்நிலை, பொருளாதார நிலைத்தன்மை, ஆதரவு அமைப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் ஆகியவையும் சமமாக முக்கியமானவை. 
     

  1. கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு ஏற்ற சூழ்நிலை எது? 

    எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு “சிறந்த சூழ்நிலை” என்று ஒன்றில்லை. இருப்பினும், பொதுவாக நல்ல ஆதரவான சூழல் என்பதில் அடங்குபவை:

  • நல்ல உடல் மற்றும் உளநலம்

  • பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்விடம்

  • சுகாதார சேவைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பிற்கான அணுகல்

  • துணைவர், குடும்பம் அல்லது சமூகத்தின் உணர்ச்சி ரீதியான ஆதரவு

  • இயன்றவரையிலான பொருளாதார திட்டமிடல்

    மிக முக்கியமாக, வயது, துணைவர், குடும்பம் அல்லது சமூகத்தின் அழுத்தத்தினால் அல்லாமல், ஒருவர் தாமாகவே தயாராகவும் விருப்பத்துடனும் இந்த முடிவை எடுக்க வேண்டும். 
     

  1. கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் முன் என்னென்ன உடல்நல பரிசோதனைகள் செய்ய வேண்டும்? 

    கர்ப்பத்திற்கு முன் செய்யப்படும் மருத்துவ ஆலோசனைகள் (Preconception Care), ஆரோக்கியமான கர்ப்பத்திற்குத் தயாராக உதவுகின்றன. அவற்றில் அடங்கக்கூடியவை:

  • பொதுவான மருத்துவ பரிசோதனை

  • ஏற்கனவே உள்ள நோய்நிலைகளின் மதிப்பீடு (உதாரணமாக - நீரிழிவு, தைரொய்ட் பிரச்சினைகள்)

  • பாலியல் தொடர்பு மூலம் பரவும் தொற்றுகளுக்கான (STI) பரிசோதனை

  • தடுப்பூசி நிலை மதிப்பாய்வு

  • கர்ப்பம் தரிக்க குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் (Folic Acid) உட்கொள்ளத் தொடங்குதல்

    மேலும், ஒரு சுகாதார நிபுணர் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்குவார்.

    FPA Sri Lankaவில் உங்களுக்கான ஆலோசனைகளை பெறுவதற்கான சந்திப்பிற்கு முன்பதிவு செய்ய 077 955 2979 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள். இணையவழி ஆலோசனைக்கு 076 588 4881 என்ற எண்ணிற்கு அழைக்கவோ அல்லது WhatsApp மூலம் தொடர்புகொள்ளவோ முடியும். 
     

  1. வாழ்க்கை முறைத் தேர்வுகள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை பாதிக்குமா? 

    ஆம். கர்ப்பம் தரிக்கும் திறனைப் பாதிக்கக்கூடிய சில காரணிகள்:

  • ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்

  • சமநிலையான உணவுமுறையைப் பின்பற்றுதல்

  • வழக்கமான உடற்பயிற்சி

  • புகைப்பிடித்தல், மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்த்தல்

  • மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தி போதுமான தூக்கத்தைப் பெறுதல்

கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் போது துணைவர்கள் இருவரின் வாழ்க்கை முறையும் முக்கியமானது. 
 

  1. கர்ப்பம் தரிக்க ஒரு தம்பதியினர் எவ்வளவு அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும்? 

    கருவுறும் காலப்பகுதியில் (Fertile Window), ஒவ்வொரு 1–2 நாட்களுக்கும் ஒருமுறை உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் உடலுறவு கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிக அழுத்தம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே உடலுறவு அடிக்கடி நிகழ்வதை விட, தொடர்ச்சியும் இருவரின் வசதியும் முக்கியமானவை. 
     

  2. பொதுவாக கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?

    ஆரோக்கியமான தம்பதியினரில்:

  • சுமார் 80–85% பேர் ஒரு ஆண்டுக்குள் கர்ப்பம் தரிக்கிறார்கள்.

  • சிலருக்கு இதைவிட அதிக காலம் எடுக்கலாம்; அதுவும் இயல்பானதே.

    பின்வரும் சூழ்நிலைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது:

  • 35 வயதிற்குக் குறைவாக இருந்தும், 12 மாதங்கள் முயற்சித்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால்

  • 35 வயதிற்கு மேல் இருந்தும், 6 மாதங்கள் முயற்சித்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் 
     

  1. மனஅழுத்தம் அல்லது மனநலம் கர்ப்பம் தரிக்கும் திறனை பாதிக்குமா? 

    அதிகமான மனஅழுத்தம் ஹோர்மோன்கள், சூல்/ கருமுட்டை வெளியேற்றம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். மனநலமும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். கர்ப்பத்தைத் திட்டமிடும் போது தேவையெனில் ஆதரவு, ஆலோசனை (Counselling) அல்லது மனஅழுத்தத்தை நிர்வகிக்கும் முறைகளைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும். 
     

  2. திட்டமிட்டபடி கர்ப்பம் ஏற்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? 

    கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படுவது பொதுவான ஒன்று. இதைப் பற்றி வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. கருவுறுதலுக்கான உதவிகளில் அடங்குபவை:

  • மருத்துவ மதிப்பீடு

  • கருவுறுதல் தொடர்பான சிகிச்சைகள் (Fertility Treatments)

  • உதவியுடன் கூடிய இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technologies)

  • ஆலோசனை மற்றும் சக ஆதரவு

    ஒவ்வொருவரின் பயணமும் வித்தியாசமானது, அதற்கான ஆதரவும் உள்ளது.

    கருவுறுதல் தொடர்பான வைத்திய நிபுணருடன்(Fertility Expert) சந்திப்பிற்க்கு முன்பதிவு செய்ய FPA Sri Lanka-வை 077 955 2979 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். இணையவழி ஆலோசனைக்கு 076 588 4881 என்ற எண்ணிற்கு அழைக்கவோ அல்லது WhatsApp மூலம் தொடர்புகொள்ளவோ முடியும்.

 

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By