வளரிளம் பருவம் என்பது ஒரு குழந்தை சிறுபராயத்திலிருந்து வளர்ந்தவராக மாறும் தருணத்திற்கிடைப்பட்ட, முக்கியமான மாறுதல்களின் காலமாகும். இந்த காலம் பொதுவாக 10 முதல் 19 வயதுக்குள் நிகழ்கிறது.வளரிளம் பருவம் என்பது மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்ட காலமாகும். இது குறிப்பிடத்தக்க உடல் வளர்ச்சியின் காலமாக மட்டுமல்லாமல், உணர்ச்சி மற்றும் உளவியல் முதிர்ச்சியின் காலமாகவும் உள்ளது.
வளரும் மூளை சுமாராக 25 வயது வரை முழுமையாக முதிர்ச்சியடையாது, ஆனால் வளரிளம் பருவத்தில், முக்கியமான மூளை வளர்ச்சி குறிப்பாக முதிர்முன்னகப் பெருமூளை எனப்படும் பகுதியில் நிகழ்கிறது. முதிர்முன்னகப் பெருமூளை ஒரு நபரின் எண்ணங்கள் மற்றும் பதிலளிக்கக்கூடிய முடிவெடுத்தல், உந்துவிசை கட்டுப்பாடு, ஆளுமைப் பண்புகள் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றிற்கு பொறுப்பாகும். ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு, குழந்தையின் சூழல், மற்றவர்களுடனான உறவுகள், ஊட்டச்சத்து, தூக்கம், உடல் செயல்பாடு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகள் பராமரிக்கப்பட வேண்டும்.
வளரிளம் பருவத்தில் மூளை முதிர்ச்சியடையும் அதே வேளையில், உணர்ச்சிகளுக்குப் பொறுப்பான மூளையின் பகுதியான லிம்பிக் அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாகிறது. இந்த வளர்ச்சிக்காலத்தில், மன அழுத்தத்துக்கு அதிக உணர்வுப்பூர்வமான எதிர்வினை ஏற்படும். இந்நிலையில், வளரிளம் பருவத்தினர் உயர்ந்த தீவிர உணர்ச்சிகளை அனுபவிப்பார்கள். அத்தோடு, நீண்ட கால விளைவுகளைப் பொருட்படுத்தாமல் உடனடி நன்மைகளை முக்கியமாகக் கருதுகிறார்கள். தாங்கள் யார் என்பதை உணர முயற்சிக்கும் வளரிளம் பருவத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக உறவுகளை அமைக்கும் இந்தப் பருவத்தில், பலமான அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்படக்கூடும். தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, உடற்பயிற்சி இல்லாமை, குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்லது பெற்றோர் புறக்கணிப்பு போன்றவை காரணமாக ஏற்படக்கூடிய மன அழுத்தம், ஒரு வளரிளம் பருவத்தினரின் உளவியல் நல்வாழ்வையும் கணிசமாக பாதிக்கும்.
உலக சுகாதார அமைப்பு (WHO), மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல நிலைமைகளை இளம் பருவத்தினரிடையே இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளது. மனநலப் பிரச்சினைகள் உள்ள இளம் பருவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இளம் பருவத்தினர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மனநலக் குறைபாடுகளின் அறிகுறிகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.
வளரிளம் பருவத்தினரின் மனநல நிலைமைகளின் அறிகுறிகள் பின்வருமாறு:
தொடர்ந்து சோகமாகவோ அல்லது மனச்சோர்வாகவோ உணருதல்
எரிச்சல் அல்லது அதிகப்படியான கோபம்
அதிகப்படியான தூக்கமின்மை அல்லது அதிகப்படியான பசியின்மை
பொதுவாக இளம் பருவத்தினருக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஆர்வம் இழப்பு
அதிகப்படியான கவலை
அதிகப்படியான பயம்
தவிர்ப்பு நடத்தை காட்டுவது
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள், சில நேரங்களில் வளரிளம் பருவத்தினரின் உணர்ச்சி மற்றும் உளவியல் வளர்ச்சியின் ஒரு இயல்பான பகுதியாக இருக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் அதிகமாகவோ அல்லது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறாகவோ இருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே உதவி பெறுவது முக்கியம். இந்த சிகிச்சைகளுக்கு மருந்துகள் அவசியமாக இருக்கத் தேவையில்லை. ஒரு வளரிளம் பருவத்தினருக்கு உதவியாக இருக்கக்கூடிய முதல் நபராக பள்ளி ஆலோசகர், நம்பகமான ஆசிரியர் அல்லது இளம் பருவத்தினரை மேலும் மனநல சேவைகளுக்கு வழிநடத்தக்கூடிய பொறுப்பான வயது வந்தவராக இருக்கலாம். மன அழுத்தங்களை சமாளிக்கும் திறன் மற்றும் நடத்தை சார்ந்த சிகிச்சைகளில் கவனம் செலுத்தும் ஆலோசனைகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள், இந்த மாற்றக் கட்டத்தில் ஏற்படும் மன உணர்வுகளை சமாளிக்கவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும் வளரிளம் பருவத்தினருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
வளரிளம் பருவத்தினரின் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே கவனிக்கப்படாமல் விட்டால், அது அபாயகரமான பழக்கங்களான சட்டவிரோதப் பொருட்களின் பயன்பாடு, தன்னைத் தானே தாக்குவது/தற்கொலை எண்ணங்கள் மற்றும் உணவு பழக்க முறைகள் குறித்த கோளாறுகள் போன்ற ஆபத்தான நடத்தைகள் அதிகரிக்க வழிவகுக்கும். பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் இந்த நடத்தை மாற்றங்களை அடையாளம் கண்டு, தகுந்த முறையில் தலையீடு செய்வது முக்கியம். மனநலப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்குவது, இந்த பிரச்சனைகள் பெரிதாக மாறுவதைத் தடுப்பதோடு, ஆரோக்கியமான எதிர்காலத்தை ஊக்குவிக்கும்.
நீங்களோ, அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ, மனச்சோர்வு, கவலை அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை அனுபவித்து வருகிறீர்கள் என நினைத்தால், தயவுசெய்து எமது ஆலோசனை சேவைகளை நாடுங்கள்:
Alokaya உளவள ஆலோசனை நிலையம் – 32/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07, +94779895252
தேசிய மனநல உதவி எண் – 1926
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்டச் சங்கம்