டிஜிட்டல் உலகம் நம் விரல் நுனியில் இருப்பதால், ஆபாசப் படங்களை அணுகுவது இதுவரை காலமும் இல்லாதளவு தற்போது எளிதாகக் கிடைக்கிறது. ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது ஒருவரின் பாலியல் இன்பம் மற்றும் பாலியல் ஆய்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், ஆபாசப் படங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும், அவற்றைப் பார்ப்பதும் நம்பத்தகாத விதத்திலான பெரும் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆபாசப் படங்களைப் பார்ப்பது தனிப்பட்ட பார்வையாளர்களை மட்டுமல்லாது, அவர்களின் தனிப்பட்ட உறவுகளிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் கூட சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும்.
உறவுகளில் ஆபாசத்தின் விளைவுகள்
ஆபாசம் நெருக்கமான உறவுகளில் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
நெருக்கமான இணையினர் தனியாகவோ அல்லது ஒன்றாக இணைந்தோ ஆபாசத்தை பார்ப்பது, பாலியல் கல்வியின் அல்லது பாலியல் ஆய்வின் ஒரு வடிவமாகக் கருதலாம். புதிய முறைகளை கற்றுக்கொள்வதன் மூலமும் தமது பாலியல் விருப்பங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும் பயனடைவார்கள். பரஸ்பர சம்மதத்துடன், ஆபாசப் படங்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளைப் பற்றி தம்பதிகளாக ஒன்றாக கலந்துரையாடுவது, இருவருக்குமிடையிலான திறந்த தொடர்பாடல் மற்றும் சிறந்த புரிதலை ஊக்குவிக்கும்.
மறுபுறம், யதார்த்தமற்ற செயற்பாடுகள் பார்வையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பாலியல் எதிர்பார்ப்புகளையும் அவர்களின் உறவுகளில் இயல்பிற்கு அப்பாற்பட்ட நடத்தைக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடும். பார்வையாளர்கள் ஆபாசப் படத்தில் நடிப்பின் செயற்பாட்டு அம்சத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆபாசப் படங்களில் பெரும்பாலும் நடிகர்கள் காட்சிகளை மிகைப்படுத்தி, பாலியல் அனுபவத்தை போலியாக (நடித்து) சித்தரிக்கிறார்கள். இது உண்மையான நெருக்கம், உணர்ச்சி, மரியாதை மற்றும் இணையர்களுக்கிடையிலான தொடர்பாடலுக்கு மாற்றாக இருக்க முடியாது. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்ப்பது உடல் தோற்றத்தில் சிக்கல்களுக்கு வழிவகுப்பதோடு, அதிகப்படியான நுகர்வு ஆபாசத்திற்கு அடிமைத்தனமான பழக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் சில தனிநபர்கள் யதார்த்தத்தை விட கற்பனையை விரும்பத் தொடங்கலாம், மேலும் உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்கி தங்கள் இணையுடன் மட்டுமே பாலியல் இன்பத்தை அனுபவிக்க போராடலாம். அத்தோடு, இணையிடையே ஆபாசத்தைப் பற்றி வெளிப்படையான தொடர்பாடல் இல்லையென்றால், இது இரகசியம், நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் துரோக உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
பாலியல் ஆரோக்கியத்தில் ஆபாசத்தின் விளைவுகள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆபாசப் படங்களை கல்வி நோக்கங்களுக்காகவும், உடற்கூறியல் மற்றும் பல்வேறு பாலியல் செயற்பாடுகள் /விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்தலாம். இருப்பினும், பாலியல் ஆரோக்கியத்தில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் பாலியல் ஆரோக்கியத்தில் ஆபாசத்தின் தாக்கம் குறித்து கவலைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றது. ஏனெனில், அவர்கள் விரிவான பாலியல் கல்வியைப் பெற்றிருக்காமல் இருக்கலாம். வழிகாட்டுதலின்றி, ஆபாசப் படங்களை காண்பது பதட்டம், தவறான தகவல்கள், உடல் பிம்பம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாலியல் பற்றிய ஆரோக்கியமற்ற எதிர்பார்ப்புகளுக்கு பங்களிக்கும்.
ஆபாசப் படங்களில் ஒப்புதல் / சம்மதம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும். சில ஆபாசப் படங்கள் மரியாதைக்குரிய மற்றும் ஒருமித்த சமதத்துடனான நடத்தையை சித்தரித்தாலும், பெரும்பாலான ஆபாசப் படங்கள் பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் செயல்களை உள்ளடக்குவதில்லை, மாறாக வன்முறை நடத்தை மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை (ஸ்டீரியோடைப்களை) ஆதரிக்கின்றன. ஆபாசப் படங்களுக்கு அடிமையாதல் பாலியல் செயலிழப்புக்கும் வழிவகுக்கும். இது நிஜ வாழ்க்கையில் நெருக்கமான உறவுகளில் விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் குறைந்த பாலியல் ஆசை போன்ற நிலைமைகளை ஏற்படுத்தும்.
சமநிலையைக் கண்டறிதல்
வாழ்க்கையின் பெரும்பாலான விடயங்களைப் போலவே, ஆபாசப் படங்களையும் (பார்த்தால்) ஒரு அளவோடு பார்க்க வேண்டும். இது அதிக தீங்கு விளைவிக்காவிட்டாலும், அதிகப்படியான நுகர்வு மற்றும் ஆபாசத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை ஒரு தனிநபரின் வாழ்க்கையிலும் அவர்களின் உறவுகளிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இறுதியில், பாலியல் மற்றும் நெருக்கம் குறித்த ஆரோக்கியமான அணுகுமுறைகளை வளர்ப்பதற்கு யதார்த்தத்தை நடிப்புடன் சமநிலைப்படுத்துவது அவசியம். தொடர்பாடல், மரியாதை மற்றும் சுய விழிப்புணர்வுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் உறவுகள் மற்றும் பாலியல் ஆரோக்கியம் போன்றவற்றை பேண முடிவதோடு, நம்பத்தகாத எதிர்பார்ப்புகளால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய முடியும்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்கள் வாழ்க்கையில் ஆபாசப் படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலையினால், ஒரு சுகாதார நிபுணரிடம் பேச விரும்பினால், குடும்ப சுகாதார மையம் அல்லது இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தின் ஆலோகய ஆலோசனை மையத்தை பின்வரும் முறைகளில் தொடர்பு கொள்ளலாம். (+94112555455, 0779895252, 076 588 4881, எண். 37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07)
எழுத்தாக்கம் - இலங்கை குடும்பத்திட்ட சங்கம்