தூக்கம், திரை நேரம் மற்றும் டிஜிட்டல் சமநிலை | The Family Planning Association of Sri Lanka

தூக்கம், திரை நேரம் மற்றும் டிஜிட்டல் சமநிலை

இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்துதல், போதிய தூக்கமின்மை மற்றும் தொடர்ந்து திரைகளைப் பார்ப்பது ஆகியவை உங்கள் மனநிலை, ஆற்றல் மற்றும் கவனத்தைப் பாதிக்கக்கூடும். தூக்கத்தையும் டிஜிட்டல் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தக் கற்றுக்கொள்வது, நீங்கள் நன்றாக உணரவும் அன்றாட செயல்பாடுகளைச் சிறப்பாக மேற்கொள்ளவும் உதவும்.

1. தூக்கமும் திரை நேரமும் மன ஆரோக்கியத்துடன் ஏன் தொடர்புடையவை?

தூக்கம் மற்றும் திரைப் பயன்பாடு தொடர்பான பழக்கங்கள் மூளை மற்றும் உடல் செயல்படும் விதத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. போதிய தூக்கமின்மை அல்லது அதிகப்படியான திரையின் பயன்பாடு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றை அதிகரித்து, கவனத்தைக் குறைக்கும். தூக்கத்திற்கும் டிஜிட்டல் பயன்பாட்டிற்கும் இடையிலான நல்ல சமநிலை உணர்வுசார் நிலைத்தன்மையையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது.

2. அதிகப்படியான திரை நேரம் இளைஞர்களை எவ்வாறு பாதிக்கிறது?

அதிகப்படியான திரை நேரம் மனச் சோர்வு, கவனம் குறைதல், கண் சோர்வு மற்றும் சமூக ஊடகங்களில் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடுவதால் ஏற்படும் அழுத்தம் அல்லது மன உளைச்சல் போன்றவற்றுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், ஓய்வு, உடல் செயல்பாடுகள் மற்றும் நேரடியாக மற்றவர்களுடன் பழகுவதற்கான நேரத்தையும் இது குறைக்கக்கூடும்.

3. சமூக ஊடகங்கள் தூக்கத்தைப் பாதிக்குமா?

ஆம். இரவு நேரங்களில் கைபேசி அல்லது சமூக ஊடகத்தினை பயன்படுத்துவது தூக்கத்தைத் தாமதப்படுத்தக்கூடும். ஏனெனில், இது மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. திரைகளிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்திற்கு உதவும் ஹோர்மோனான மெலட்டோனின் சுரப்பைக் குறைக்கக்கூடும்.

4. உணர்வுசார் நல்வாழ்வுக்கு தூக்கம் ஏன் முக்கியமானது?

தூக்கம் மூளைக்கு உணர்வுகளைச் செயலாக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவுகிறது. போதிய தூக்கமின்மை ஒருவரை அதிக எரிச்சலுடன், பதற்றமாக அல்லது உணர்ச்சிவசப்படுபவராக மாற்றக்கூடும். மேலும், சிறிய விடயங்களாலும் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உணர்வை ஏற்படுத்தலாம்.

5. இளைஞர்களுக்கு எத்தனை மணி நேர தூக்கம் தேவை?

பெரும்பாலான வளரிளம் பருவத்தினரும், இளம் வயதினரும் ஒரு இரவில் சுமார் 7–9 மணி நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரத்தின் அளவு மட்டுமல்லாமல், சீரான தூக்கப் பழக்கத்தைக் கொண்டிருப்பதும் முக்கியமானது.

6. மோசமான தூக்கப் பழக்கங்களின் அறிகுறிகள் என்ன?

  • காலையில் எழுந்த பின்னரும் சோர்வாக உணர்தல்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • மனநிலை மாற்றங்கள் அல்லது எரிச்சல்
  • தாமதமாகத் தூங்குதல் அல்லது அடிக்கடி விழித்துக்கொள்ளுதல்
  • இரவில் மிகவும் தாமதமாகும் வரை கைபேசியைப் பயன்படுத்துவதைச் சார்ந்திருத்தல்


7. திரை நேரம் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

அதிகப்படியான திரை நேரம் மன அழுத்தம், பதற்றம் மற்றும் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் மனநிலையை அதிகரிக்கக்கூடும். மேலும், யதார்த்தமற்ற படங்கள் மற்றும் தொடர்ந்து ஏற்படும் இணையவழி அழுத்தம் காரணமாக சுயமதிப்புணர்வும் பாதிக்கப்படலாம்.

8. “Digital burnout” என்றால் என்ன?

தொடர்ச்சியான தொலைபேசிப் பயன்பாடு, அறிவிப்புகள் மற்றும் இணையச் செயல்பாடுகளால் ஒருவர் மனதளவில் சோர்வடையும்போது “Digital burnout” ஏற்படுகிறது. இது சோர்வு, ஊக்கமின்மை மற்றும் உணர்ச்சிப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.

9. ஒருவர் தனது தூக்கத்தை மேம்படுத்தி, திரைப் பயன்பாட்டின் தாக்கத்தைக் குறைப்பது எப்படி?

  • தூங்குவதற்கு 30 - 60 நிமிடங்களுக்கு முன்பு கைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • நிலையான தூக்க நேரப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்
  • கைபேசியை படுக்கைக்கு அருகில் வைக்காமல் இருக்கவும்
  • இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும்
  • புத்தகம் வாசித்தல் அல்லது அமைதியான இசையைக் கேட்பது போன்ற ஓய்வளிக்கும் செயல்களில் ஈடுபடவும்.


10. ஒருவர் எப்போது உதவியை நாட வேண்டும்?

மோசமான தூக்கப் பழக்கங்கள், அதிகப்படியான திரை நேரம் அல்லது டிஜிட்டல் பயன்பாட்டினால் ஏற்படும் அதிகப்படியான மனச் சுமை ஆகியவை அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கினால் உதவியை நாட வேண்டும். உதாரணமாக, மனநிலை, கல்வி, உறவுகள் அல்லது உடல் ஆரோக்கியம் போன்றவை பாதிக்கப்படும்போது ஆதரவை நாடுவது முக்கியம்.

ஆலோசகர் அல்லது சுகாதார நிபுணரிடம் பேசுவது, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், உங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான அன்றாடப் பழக்கங்களை உருவாக்கவும் உதவும்.

FPA Sri Lanka-வின் ஆலோசனைச் சேவைகள் மற்றும் இணைய ஆதரவு நிலையங்கள் மூலம் இரகசியமான ஆதரவு கிடைக்கிறது:

077 955 2979 – Bloom by FPA Sri Lanka

076 588 4881 / 076 588 4882 – Happy Life Call Centre (தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp)

077 989 5252 – Alokaya Counselling Centre

அனைத்து சேவைகளும் இரகசியமானவை மற்றும் தீர்ப்பளிக்காத அணுகுமுறையைக் கொண்டவை. உங்கள் உணர்வுசார் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிப்பதற்காக இச்சேவைகள் வழங்கப்படுகின்றன.

 

Author

The Family Planning Association of Sri Lanka

எங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்

2026 | Family Planning Association All Rights Reserved
As Imagined By