மகப்பேறியல்/ பெண்ணோயியல் மருத்துவ நிபுணரை சந்திப்பது என்பது பல பெண்கள் சங்கடம் மற்றும் மற்றவர்களின் தீர்ப்புக்கு பயந்து தள்ளிப்போடும் ஒரு கடினமான செயலாக இருக்கலாம், ஆனால் அது ஒரு பெண்ணின் நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். நீங்கள் முதன்முறையாக மகப்பேறு மருத்துவ நிபுணரை சந்திக்க வருகை தருகிறீர்களா அல்லது பலமுறை வருகை தந்திருக்கிறீர்களா என்பதைத் தாண்டி , ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணரிடம் நீங்கள்என்ன எதிர்பார்க்கலாம் என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பது பயத்தை குறைத்து, சந்திப்பை எளிதாக்கி, தகவலளிக்கக்கூடியதாகவும் தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடியதாகவும் மாற்றும்.
ஒரு பெண்ணோயியல் மருத்துவ நிபுணர் எவ்வகையான சேவைகளை வழங்குகிறார்?
பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் கருப்பை, ஃபலோபியன் குழாய்கள், சூலகங்கள் மற்றும் யோனி ஆகியவற்றை உள்ளடக்கிய பெண் இனப்பெருக்க அமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள், ஆனால் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பொதுவான சுகாதார சோதனைகளையும் அவர்கள் மேற்பார்வையிட முடியும்.
மாதவிடாய் நிலைமைகள், அசாதாரண யோனி வெளியேற்றங்கள் உள்ளிட்ட பெண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சையளித்தல்.
உடலுறவு கொள்வதற்கான ஆசையின்மை, வலிமிகுந்த உடலுறவு போன்ற பாலியல் ஆரோக்கியம் தொடர்பான நிலைமைகளைக் கண்டறிந்து நிர்வகித்தல்.
முதற்கட்ட பரிசோதனைகளில் பாப் ஸ்மியர் (Pap Smear) உள்ளிட்ட கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை முக்கியமானது, ஏனெனில் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், சிறந்த சிகிச்சை முடிவுகளை ஏற்படுத்தும்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான (STIs) பரிசோதனை
பெண் இனப்பெருக்க அமைப்பின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள்
கருவுறாமையைக் கண்டறிதல் மற்றும் அதனை நிர்வகித்தல் உள்ளிட்ட கருவுறுதல் தொடர்பான சிகிச்சைகள்
மகப்பேறுக்கு முற்பட்ட ஆலோசனை மற்றும் கர்ப்பகால பரிசோதனை
மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு
பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் உட்பட பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஆலோசனைகள்
கருத்தடை ஆலோசனை மற்றும் சேவைகள்
மாதவிடாய் நிறுத்தத்தை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல்
ஹோர்மோன் சமநிலையின்மை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல்
பொது சுகாதார பரிசோதனைகள்
ஒரு பெண்ணோயியல் மருத்துவ நிபுணரைச் சந்திக்கும்போது என்ன எதிர்பார்க்கலாம்
ஒரு பெண்ணோயியல் மருத்துவ நிபுணரைச் சந்திக்க ஒரு உறுதி செய்த பிறகு, அவர்கள் ஆரம்பத்தில் உங்கள் மருத்துவக் நிலைமைகள் மற்றும் உங்கள் கடந்தகால மருத்துவ/மகப்பேறு மருத்துவ வரலாற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்பார்கள்.
உங்கள் கரிசனைகள் மற்றும் மருத்துவ வரலாற்றின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவ நிபுணர் சில பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகளை பரிந்துரைக்கலாம். பொதுவான பரிசோதனைகளில் உயரம், எடை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சரிபார்ப்பது அடங்கும். எந்தவொரு நெருக்கமான பரிசோதனைகள் அல்லது ஆய்வுகளையும் செய்வதற்கு முன், மருத்துவர் உங்களிடம் ஒப்புதல் கேட்பார். இந்நடைமுறைகள் சங்கடமாக இருக்கலாம், ஆனால் அவை வலிமிகுந்ததாக இருக்கக்கூடாது, மேலும் செயல்முறையின் எந்த கட்டத்திலும் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அதனை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
சில பொதுவான மகப்பேறியல்/ பெண்ணோயியல் மருத்துவ பரிசோதனைகளில் பின்வருவன அடங்கும்:
இடுப்புப் பரிசோதனை(Pelvic examination) - வெளிப்புற பிறப்புறுப்பு (யோனித்துவாரம்) மற்றும் யோனி குழியின் அசாதாரணங்களை சரிபார்க்க, இடுப்பிலிருந்து கீழே ஆடைகளை அகற்றி, முதுகுப்புறமாக படுத்து, உங்கள் முழங்கால்களை வளைத்து, பின்னர் உங்கள் முழங்கால்களை விரிக்க வேண்டும். மருத்துவர் வெளிப்புற பிறப்புறுப்பை பரிசோதித்து, சூலகங்கள் அல்லது கருப்பை போன்ற அருகிலுள்ள அமைப்புகளிலிருந்து ஏதேனும் மென்மையான அல்லது அசாதாரண வளர்ச்சியை சரிபார்க்க யோனிக்குள் 2 விரல்களை மெதுவாகச் செருகுவார்.
உடற்கூற்று உட்காட்டி மூலமான பரிசோதனை (Speculum examination)- யோனியைத் திறக்க ஸ்பெகுலம் எனப்படும் ஒரு சிறிய உட்காட்டி சாதனம் யோனிக்குள் செருகப்படுகிறது, இதனால் மருத்துவர் யோனி மற்றும் கருப்பை வாய் (கருப்பையின் நுழைவாயில்) ஆகியவற்றை நேரடியாகக் காட்சிப்படுத்த முடியும். பின்னர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான (STI) சோதனை அல்லது கர்ப்பப்பை வாய் பரிசோதனைக்காக யோனி குழி அல்லது கருப்பை வாயிலிருந்து (ஒத்துப்பஞ்சு(swabs) அல்லது தூரிகைகளைப் பயன்படுத்தி) மாதிரிகளை எடுக்கலாம்.
சில பொதுவான மகப்பேறியல் / பெண்ணோயியல் மருத்துவ பரிசோதனைகள் பின்வருமாறு:
இடுப்புப் பகுதியின் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்(Ultrasound scan of the pelvis)
டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்(Transvaginal ultrasound scan)
பேப் ஸ்மியர் ஸ்கிரீனிங்(Pap smear screening)
யோனி ஸ்வாப்ஸ்(Vaginal Swabs)
உங்கள் சந்திப்பு சிறப்பாக அமைய சில குறிப்புகள் இங்கே:
உங்களிடம் உள்ள ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துக்களை எழுதி, சந்திப்புக்கு எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் கடந்தகால மருத்துவ நிலைமைகள், பெண்ணோயியல் மற்றும் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.
உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்த சில ஆழ்ந்த மூச்செடுத்து ஓய்வெடுங்கள்.
இலங்கையின் தனியார் மற்றும் அரச சுகாதாரத் துறைகளிலும், இலங்கை குடும்பத்திட்ட சங்கம் போன்ற சில அரச சாரா நிறுவனங்களிலும் (NGO) பெண்ணோயியல் மருத்துவ சேவைகளைப் பெறலாம். அரசாங்க சுகாதாரத் துறையில் சேவைகள் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அதேவேளை, தனியார் சுகாதாரத் துறையில் கட்டணத்தினடிப்படையிலும், அரசு சாரா நிறுவனங்களில் மானிய அடிப்படையிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் பெண்ணோயியல் மருத்துவ சேவைகள் ஒரு முக்கிய கூறாகும், இதை தாமதிக்கக் கூடாது. உங்கள் சந்திப்பில் என்ன ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதும், அதற்கான முற்கூட்டியே தயாரிப்புகளை மேற்கொள்வதும், உங்கள் அனுபவத்தை மேலும் வசதிகரமாகவும் ஆற்றல்மிக்கதாகவும் மாற்றும்.
பெண்ணோயியல் மருத்துவ சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கும், பெண்களின் சுகாதார நிலைமைகள் குறித்த ஆலோசனைகளுக்கும், 0112 555 455 / 077 955 2979 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தைத் தொடர்பு கொள்ளவும். அல்லது 37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07 என்ற முகவரியில் உள்ள குடும்ப சுகாதார மையத்தை அணுகவும்.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்ட சங்கம்