பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல் என்பது நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள், ஆனால் உண்மையில் அவற்றின் அர்த்தம் என்ன?
பாலியல் துன்புறுத்தல் என்பது பல வழிகளில் நிகழலாம். இதில் விரும்பத்தகாதவகையில் பாலியல் கருத்துகளை முன்வைத்தல் (வீதிகளில் நிகழும் துன்புறுத்தல் உட்பட), சம்மதமற்ற உடல் தொடர்புகள் என்பனவும் அடங்கும். பாலியல் வன்கொடுமை என்பது துஷ்பிரயோகம் உட்பட எந்தவொரு சம்மதமற்ற பாலியல் செயலையும் உள்ளடக்கியது.
2024 ஆம் ஆண்டில், இலங்கையில் பெண்களுக்கு எதிரான 2200 க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இலங்கையில் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்தச் செயல்கள் குற்றமாக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை அரசியலமைப்பு பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது. பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தேசிய செயல் திட்டத்தையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுக்குரிய உதவிச் சேவைகளுடன் இணைக்க ஒரு பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு உள்ளது. இதில் மகளிர் மேம்பாட்டு அதிகாரிகள், பயிற்சி பெற்ற பொலிஸ் பிரிவுகள் மற்றும் சட்ட உதவி சேவைகள் ஆகியவை அடங்கும். சட்ட நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், சமூகத்தில் ஏற்படக்கூடிய களங்கம், பழிவாங்கப்படக்கூடிய பயம் மற்றும் கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வு இல்லாமை காரணமாக, பதிவாக்கப்படாத துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலை அனுபவித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான படிமுறை ரீதியிலான வழிகாட்டி கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலை நீங்கள் அனுபவித்தால் என்ன செய்வது:
பாதுகாப்பான இடத்தைக் கண்டறியவும் - உங்கள் நல்வாழ்வு மிக முக்கியமானது
தேவைப்பட்டால், அருகிலுள்ள வைத்தியசாலை அல்லது மருத்துவமனையில் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்
நடந்த சம்பவத்தை ஆவணப்படுத்தவும் - நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தேர்வுசெய்தால் உதவியாக இருக்கும் குறிப்புகள், செய்திகள் மற்றும் படங்களை ஆதாரமாக வைத்திருங்கள்.
துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கான சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பிடம் பேசுங்கள், உதாரணமாக:
Women in Need – Tel: 0775676555
CCC line – Tel: 1333
Lanka Lifeline – Tel: 1375
மேற்குறிப்பிட்ட அனைத்து அமைப்புகளும் சட்ட வழிகாட்டுதல் (பொலிஸ் நிலையத்தில் புகார் அளிப்பது உட்பட), தங்குமிடங்கள், மருத்துவ பராமரிப்பு, உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு ஆகியவற்றை வழங்க 24/7 செயல்படுகின்றன.
நிபுணரொருவருடன் பேசுங்கள் - ஒரு நிபுணரின் ஆலோசனை உங்களை குணப்படுத்துவதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலை அனுபவித்தால் என்ன செய்ய வேண்டும்:
பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதலை அனுபவித்த ஒருவரை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் வெளிப்பாடு அவர்களை குணப்படுத்தும் பயணத்தில் கணிசமானளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் எடுக்கக்கூடிய முக்கியமான படிமுறைகள் பின்வருமாறு:
முதலில் எவ்வித முன்கூட்டிய தீர்மானங்களுமில்லாமல் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், அவர்களை நம்புங்கள், அவர்களுக்கு ஆதரவளியுங்கள்.
அவர்கள் விரும்பினால், அவர்களுடன் மருத்துவமனை, பொலிஸ் நிலையம் அல்லது ஆலோசகரைச் சந்திக்க அழைத்துச் செல்ல முன்வாருங்கள்.
இலங்கையில் பாலியல் வன்முறை தொடர்பான புகார்கள் இன்றும் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்த்துப் போராட, விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், கலாச்சார மாற்ற உத்திகளை உருவாக்குவதன் மூலமும் சமூகத்தில் ஒரு வகுப்புவாத மாற்றத்தை உருவாக்குவது முக்கியம். வளரிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கான விரிவான பாலியல் கல்வியைச் சேர்ப்பது, அனைத்து வடிவங்களிலும் துன்புறுத்தலைத் தடுக்க பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் கொள்கைகளை செயல்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறும் நடத்தையை வெளிப்படையாக சவால் செய்வது ஆகியவை இதில் அடங்கும். ஒப்புதல்/சம்மதம் மற்றும் மரியாதையைப் புரிந்துகொள்ளும் ஒரு தலைமுறையை வளர்ப்பதற்கு சமூகத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மிக முக்கியம்.
பாலியல் வன்முறையை அனுபவிப்பவர்களுக்கு ஆதரவளிக்க இலங்கை குடும்பத்திட்ட சங்கம் உறுதிபூண்டுள்ளது, உதவி தேடும் அனைவருக்கும், அவர்களை எவ்விதத்திலும் தவறாக மதிப்பிடாத மற்றும் பாதுகாப்பான ஒரு இடத்தை உறுதி செய்வதற்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர். அவ்வாறான உதவிகளை பெற ஆலோசகர் அல்லது மருத்துவ நிபுணருடன் பேச, இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தில் உள்ள குடும்ப சுகாதார மையம் அல்லது ஆலோகயா ஆலோசனை மையத்தைத் தொடர்பு கொள்ளவும் (+94112555455, எண். 37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07).
நீங்கள் விருப்பமின்றி பாலியல் செயல்களில் ஈடுபட வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது பாலியல் வன்முறையின் பாதிப்புக்குள்ளாகி, கர்ப்பம் குறித்த பயத்தில் இருந்தாலோ, உங்களுக்கான உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
தகவல் மற்றும் உதவிகளைப் பெற இங்கே பார்வையிடவும்: https://bit.ly/41egWIC
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்ட சங்கம்