நான் உடல் ரீதியாக தயாராக இருக்கிறேனா?
நான் மன ரீதியாக தயாராக இருக்கிறேனா?
இந்த உறவில் நான் பாதுகாப்பாக உணர்கிறேனா?
தொடர்ந்தும் நான் பாதுகாக்கப்படுவேனா?
பாலியல் செயலில் ஈடுபடலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும்போது ஒருவர் மனதில் எழும் சில கேள்விகள் இவை. இது மிகவும் தனிப்பட்ட முடிவு, ஆனால் பாதுகாப்பான நெருக்கமான உறவுகளை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது, எனவே இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முடிவெடுக்கும் போது, மனதளவிலான தயார்நிலை, பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், தொடர்பாடல் மற்றும் ஒப்புதல்/ சம்மதம் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான பாலியல் அனுபவத்திற்கு மனதளவிலான தயார்நிலை மற்றும் உணர்வு ரீதியான முதிர்ச்சி ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணிகளாகும். மனதளவிலான தயார்நிலை என்பது, உடலுறவின் பின்னர் எந்த வருத்தத்தையும் தவிர்க்க, நேர்மையான முறையில், உங்களதும் உங்கள் துணையினதும் உணர்வுகள் மற்றும் பாலியல் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளும் உணர்வு ரீதியான முதிர்ச்சியைக் கொண்டிருப்பதை உள்ளடக்குகிறது. உணர்வு ரீதியான முதிர்ச்சியைக் கொண்டிருப்பது, உறவில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், சாத்தியமான கர்ப்பம் அல்லது பாலியல் ரீதியாக பரவும் தொற்று (STI) உள்ளிட்ட பாலியல் செயல்பாட்டின் எந்தவொரு சாத்தியமான விளைவுகளையும் நீங்களும் உங்கள் துணையும் கையாள முடியும் என்பதையும் உறுதி செய்கிறது.
எந்தவொரு உறவிலும், குறிப்பாக பாலியல் உறவில் தொடர்பாடல் மற்றும் ஒப்புதல்/ சம்மதம் மிக முக்கியம். மனதளவிலான தயார்நிலையை மதிப்பிடுவதைப் போலவே, பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒருவர் தமது துணையின் உணர்வுகள், விருப்பங்கள் மற்றும் நெருக்கம் தொடர்பான எல்லைகளைப் புரிந்துகொண்டு, அவற்றை மதிக்க வெளிப்படையாகப் பேசுவதும் இதில் அடங்கும். தொடர்பாடல் ஒரு உறவை வலுப்படுத்துவதோடு, பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் வசதியாகவும், மரியாதைக்குரியவர்களாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறது. ஒப்புதல் என்பது பேரம் பேச முடியாதது. அது வற்புறுத்தல் இல்லாமல், மீளக்கூடியதாக, தகவலறிந்ததாக, உற்சாகமாக மற்றும் சுதந்திரமாக வழங்கப்பட வேண்டும். தெளிவான ஒப்புதல் மற்றும் தொடர்பாடல் இல்லாமை, பாலியல் செயல்பாடுகளில் தவறான புரிதல்களுக்கும் தீங்குக்கும் வழிவகுக்கும்.
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் காணப்படக்கூடிய உங்கள் இருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய புரிதல், பாதுகாப்பான தொடர்பு அல்லது உறவை உறுதி செய்வதற்கான மற்றொரு முக்கிய காரணியாகும். இரு இணையினரும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளுக்கான(STI) பரிசோதனைகள் உள்ளிட்ட வழக்கமான சுகாதார பரிசோதனைகள் அவசியம். ஒரு துணையின் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுக்கான(STI) நிலை குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால், ஆணுறை போன்றதொரு கருத்தடை முறையைப் பயன்படுத்துவது பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள்(STI) பரவுவதைத் தடுப்பதோடு, எதிர்பாராத கர்ப்பத்தையும் தடுக்கும். பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன், உங்கள் அணுகலுக்குரிய பல கருத்தடை முறைகளைப் பற்றி அறிந்துகொண்டு, அது தொடர்பிலான அறிவினை வளர்ப்பதன் மூலம் தம்மை மேம்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும் செயலாகும்.
பல நாடுகளில், குறிப்பாக இலங்கையில், பாலியல் தயார்நிலை என்பது நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தினால் வலுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த தாக்கங்களை மதிப்பீடு செய்து, சமூக மற்றும் சகாக்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், உங்கள் சொந்த நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகளை எடுப்பது முக்கியம்.
இலங்கையில் பெண்களுக்கான பாலியல் நடவடிக்கைக்கான ஒப்புதலிற்கான/சம்மதத்திற்கான சட்டப்பூர்வ வயது 16 ஆகும்(ஆண்களின் சம்மதத்திற்கான வயது வழங்கப்படவில்லை). இருப்பினும், மேலே விவாதிக்கப்பட்டபடி, குறிப்பாக இளம் வயதிலேயே உடலுறவு கொள்ளத் தயாராவது அச்சுறுத்தலாக இருக்கலாம், எனவே உடலுறவு கொள்வதற்கு முன் ஒருவரின் உணர்ச்சி மற்றும் உடல் நலனையும், சமூக அம்சங்களையும் கருத்தில் கொள்வது முக்கியம். இலங்கையில், பாலியல் என்பது பெரும்பாலும் வெளிப்படையாக விவாதிக்கப்படாத ஒரு தடைசெய்யப்பட்ட விடயமாகும், ஆனால் இந்த தடையை உடைத்து பாலியல் பற்றிய திறந்த உரையாடல்களை நடத்துவது முக்கியம், இது இந்த தலைப்பை நன்கு புரிந்துகொள்ளவும் பாலியல் செயல்பாடு தொடர்பான ஆரோக்கியமான அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கவும் முக்கியமாகும்.
கருத்தடை முறைகள், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகளுக்கான பரிசோதனை அல்லது பாலியல் தயார்நிலை குறித்து ஆலோசகரிடம் பேசுவதற்கு, குடும்ப சுகாதார மையம் அல்லது இலங்கை குடும்பத்திட்டச் சங்கத்தில் உள்ள ALOKAYA உளவள ஆலோசனை நிலையத்தை (+94112555455, எண். 37/27, புல்லர்ஸ் லேன், கொழும்பு-07) தொடர்பு கொள்ளவும்.
எழுத்தாக்கம்
இலங்கை குடும்பத்திட்டச் சங்கம்