மார்பக புற்றுநோயானது உலகலாவிய ரீதியிலும் இலங்கையிலும் பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவானதொரு புற்றுநோயாகும். இலங்கையில் நாளாந்தம் சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3 பெண்கள் மார்பக புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றும் இலங்கை சுகாதார அமைச்சு சமீபத்தில்(2024) வெளிப்படுத்தியது. இலங்கையில் மார்பக புற்றுநோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3000 பெண்கள் கண்டறியப்படுகின்றனர். மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சையளிப்பதும் குணப்படுத்துவதும் எளிது.
மார்பக புற்றுநோய் முக்கியமாக பெண்களில் ஏற்படுகிறது, மேலும் வயது அதிகரிக்கும்போது இதன் ஆபத்தும் அதிகரிக்கிறது (குறிப்பாக 50 வயதுக்கு மேல்). இருப்பினும், மார்பக புற்றுநோய் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படலாம்.
ஆபத்துக்கான பிற காரணிகள் பின்வருமாறு:
முன்கூட்டிய பருவமடைதல்(முதல் மாதவிடாய் ஏற்படும் வயது).
தாமதமான மாதவிடாய் நிறுத்தம் (மாதவிடாய் நிறுத்தப்படும் வயது)
குழந்தைகள் இன்மை
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல்
உடற்பருமன்
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
அதிகம் அமர்ந்தேயிருக்கக்கூடிய வாழ்க்கை முறை
மார்பக கதிரியக்க சிகிச்சை
சில மரபணுக்கள் (உ +ம் - கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்த அஷ்கெனாசி யூதர்கள்/Ashkenazi Jews)
பரம்பரை
சில ஹோர்மோன் மருந்துகள்
பின்வரும் அறிகுறிகள் / அடையாளங்கள் அடிப்படை மார்பக புற்றுநோயைக் குறிக்கலாம். அத்தோடு மேலதிக விசாரணைகளைத் தொடர ஒரு சுகாதார நிபுணரின் கவனத்திற்கு இவை கொண்டு வரப்பட வேண்டும்:
மார்பகத்தில் மார்பகக் கட்டி அல்லது இயல்பைவிட தடிப்பானதாக காணப்படல்
அக்குள் கட்டிகள்
மார்பகத்தின் மீது தோல் வெதுவெதுப்பாக அல்லது சிவந்து காணப்படல்
மார்பகத்தில் தோல் பள்ளங்கள் காணப்படல்
மார்பகத்தில் ஆரஞ்சு தோல் போன்ற தோல் காணப்படல்
முலைக்காம்பு உள்நோக்கி அல்லது மூழ்கிய நிலையில் காணப்படல்
முலைக்காம்பிலிருந்து வெளியேற்றம்
முலைக்காம்பைச் சுற்றி மேலோடு போன்ற புண்
மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம்
மார்பக வலி (அரிதானது)
மார்பில் காயங்கள்
மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதில் மார்பக புற்றுநோய் பரிசோதனையானது முக்கிய பங்கு வகிக்கிறது. இது 3 படிகளை உள்ளடக்கியது:
மார்பக சுய பரிசோதனை.
மருத்துவ மார்பக பரிசோதனை.
அல்ட்ராசவுண்ட் மற்றும் / அல்லது மேமோகிராம்(Ultrasound and/or mammogram) (மருத்துவ ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டால் அல்லது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம்)
20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்டால் மாதவிடாய் காலத்திற்கு 3-5 நாட்களுக்குப் பிறகும், மாதவிடாய் இல்லையென்றால், உங்கள் மார்பகங்களை ஒரு மாதத்திற்கு ஒரு முறை வசதியான நேரத்தில் (அதாவது, ஒவ்வொரு மாதமும் 1 ஆம் திகதி) பரிசோதிக்கவும். விரல்களின் மென்மையான தசைப்பகுதியைப் பயன்படுத்தி, பெண்கள் ஒரு நேரத்தில் ஒரு மார்பகத்தை, காறையெலும்பிறகு அடியில் இருந்தும், முலைக்காம்பு பகுதி உட்பட முழு மார்பக திசுக்களிலும் உணர வேண்டும். அக்குள் பகுதியையும் பரிசோதிக்க வேண்டும். முலைக்காம்பு ஏதும் வெளியேற்றமுள்ளதாக என பரிசோதிக்க முலைக்காம்பை மெதுவாக அழுத்துவதும் முக்கியம். சுய மார்பக பரிசோதனையின் சரியான படிகளை இங்கே இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் காணலாம்.
(Link)
20-40 வயதுக்குட்பட்ட பெண்களில் ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண்டுதோறும் ஒரு சுகாதார நிபுணரால் மருத்துவ மார்பக பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
ஏதேனும் கட்டி காணப்பட்டால், அல்ட்ராசவுண்ட் மற்றும் / அல்லது மேமோகிராம் பரிசோதனை நடத்தப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்பது வலி இல்லாத ஸ்கேன் பரிசோதனை முறையாகும், இதற்கு எந்த சிறப்பு தயாரிப்பும் தேவையில்லை. மேலும் இது அடிப்படை மார்பக திசுக்களின் தெளிவான பார்வையை வழங்குகிறது. மேமோகிராம் என்பது குறைந்த அளவிலான எக்ஸ்ரே பரிசோதனையாகும், இது மார்பக கட்டமைப்பின் மிகவும் சிக்கலான அமைப்பின் பார்வையைப் பெற பயன்படுவதோடு, மார்பக பரிசோதனையின் போது உணர முடியாத புண்களைக் கண்டறியவும் உதவும். மேமோகிராம் என்பது ஒரு முக்கியமான பரிசோதனையாகும். அத்தோடு 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 2-3 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும்.
இலங்கையில், மேமோகிராம் பரிசோதனைகள் அரச புற்றுநோய் கண்டறிதல் மையங்கள் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் இலவசமாக நடத்தப்படுகின்றன, மேலும் தனியார் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவமனைகளிலும் கட்டணத்திற்கு உட்பட்டு இப்பரிசோதனைகள் வசதிகள் கிடைக்கின்றன.
மார்பக புற்றுநோயுடன் பல சிக்கல்கள் இருந்தபோதிலும், ஆரம்பத்தில் இந்நிலைமை கண்டறியப்பட்டால், மார்பக புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன், இது குணப்படுத்தக்கூடிய நோயாகும். எனவே மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களிடையே அதை ஊக்குவிப்பது முக்கியம்!
எழுத்தாக்கம்
ஸ்ரீலங்கா குடும்பத்திட்ட சங்கம்